இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர் – சிறிதரன்

06.10.2021 05:00:05

இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர் – சிறிதரன் எம்பி ஆதங்கம் 

இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் உரைக்கு அரசாங்க தரப்பினரால் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

நேற்று  நாடாளுமன்றத்தில் வரிச்சட்டங்கள் தொடர்பிலே விவாதங்கள் இடம்பெற்ற பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றியிருந்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் படுகொலை,நவாலிப் படுகொலை, செம்மணி படுகொலை, செஞ்சோலைப் படுகொலை என பட்டியலிட்டு உரையாற்றிய போதே அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன்,அவர் உரையாற்றிய போது இடைஇடையே குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் தொடர்ந்தும் உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அவரது உரையில், “கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர்.01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமான அன்றைய நாள், இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரன் அவர்களது 25 ஆவது அகவை நாளாகும். முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்த இனவாத அரசின் கோர முகத்தை இந்த உலகுக்கு எண்பித்த ஆகப்பெரும் போர்க்குற்றச் சாட்சியமாய் இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களும், பாலச்சந்திரனின் படுகொலையும் அமைந்திருந்தது. 

சுற்றிவர மண்மூட்டைகளால் சூழப்பட்ட ஓர் மரப்பலகையில், கையில் ஒரு பிஸ்கட் பக்கற்றும், கையருகே ஓர் நீர்க்குவளையுமாக, எந்தச் சலனமுமற்று எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், அதே பாலச்சந்திரன் மேலாடையற்ற மார்பில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளத்தோடு, உயிர்பிரிந்த நிலையில் தரையில்க் கிடந்த புகைப்படத்தையும் சனல்.4தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கணங்கள், உலகப் பரப்பெங்கும் வாழும் இதயமுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் இனம், மொழி, மதம் கடந்து இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது.

தமிழீழத் தேசியத் தலைவராக, தமிழர்கள் தம் நெஞ்சில் வைத்துப் பூசித்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் என்ற ஒற்றைக் காரணமே, பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரனை கோரமாகப் படுகொலைசெய்த இந்த இனவெறி அரசின் உயிர்ப்பலிப் பசிக்குப் போதுமானதாக இருந்தது.

காலம்காலமாக ஆட்சிக்குவந்த அத்தனை சிங்கள அதிகார பீடங்களும் தமிழர்கள் மீதான அதிகபட்ச அதிகார வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்த அப்போதைய ஆட்சிக் காலத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து ஈழத்தமிழர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்ட இன அழிப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களுள் ஒன்றாய் அமைந்த பாலச்சந்திரனின் சாவு, ஒட்டுமொத்த தமிழர்களின் இதய ஓரங்களிலும் இன்னமும் ரணமாய் வலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தை ஏற்று, 1991 ஆம் ஆண்டு இலங்கை அதில் கைச்சாத்திட்டுள்ள போதும், இந்த நாட்டில் தமிழ்ச் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற சொற்பிரயோகத்துக்கு எந்த அவசியமுமற்று, அவர்களுக்கான உயிர்வாழும் உரிமை கூட பௌத்த சிங்கள பேரினவாதிகளால் வலிந்து பறிக்கப்பட்டு வருவதை இவ்விடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட எண்ணுக்கணக்கற்ற சிறுவர்கள், ஆவணப்படுத்தப்படாத படுகொலைச் சம்பவங்கள், கணக்கிடப்படாத இழப்புக்களைக் கொண்ட படுகொலைகள் நீங்கலாக 1974 ஜனவரி 10 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை முதல் 2008 டிசம்பர் 20 வட்டக்கச்சி குண்டுவெடிப்பு வரையான, ஆவணப்படுத்தப்பட்ட 95 படுகொலைச் சம்பவங்களில் மட்டும் கைக் குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான 1929 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுள் மிக முக்கியமாக நவாலிப் படுகொலை உள்ளிட்ட, அரச படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 1995 யூலை 9,பலாலி மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதல்களால் நிலைகுலைந்து, உடுத்த உடைகளுடன் உயிரைக் கையில்பிடித்தபடி, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மீது புக்காரா விமானங்கள் ஈவிரக்கமின்றி வீசிச் சென்ற 13 குண்டுகளால், 147 பேர் கொல்லப்பட்டதோடு, 360 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதன்போது கொல்லப்பட்டவர்களுள் 46 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

1995 செப்ரெம்பர் 22 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தார்கள். 1996 செப்ரெம்பர் 7 ஆம் திகதி, யாழ்.சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி குமாரசாமி அவர்கள், செம்மணி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடு, அவரைத் தேடிச்சென்ற தாயார் திருமதி.இராசம்மா குமாரசாமி, அயலவர் திரு.கிருபாமூர்த்தி, சகோதரன் குமாரசாமி பிரணவன் ஆகியோரையும் இராணுவத்தினர் படுகொலை செய்து செம்மணி வயல்வெளியில் புதைத்திருந்தனர்.

 அக்காலப்பகுதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட 600 இற்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அதே செம்மணி வயல் வெளியில் புதைக்கப்பட்டமையும் இந்த நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கான சாட்சியங்களே!. 2006 ஓகஸ்ட் 14, முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் சிறுவர் இல்லம், நலன்புரி நிலையம், குடியிருப்புக்கள் என்பன அமைந்திருந்த பகுதியில், அதிலும் குறிப்பாக அநாதரவான குழந்தைகளின் காப்பகமான செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை இலக்குவைத்து, மிகப் பயங்கரமாக 16 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள், செஞ்சோலைச் சிறுவர் இல்லச் சிறுமிகள் உள்ளிட்ட 17 – 19 வயதிற்கு இடைப்பட்ட 61 பேர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, 120 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர். 2007 கார்த்திகை 27, தமிழ்த் தேசிய மாவீரர் தினமான அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயங்கன்குளம் பகுதியில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 

குழந்தைகள், சிறுவர்கள் என்ற எந்த பேதமுமற்று, அடிப்படை மனிதநேயச் சிந்தனைகூட இல்லாது, சர்வதேச நியமங்கள் அனைத்தையும் மீறி, தமிழர்கள் என்ற இனவெறிச் சிந்தனையின் வெளிப்பாட்டால், பௌத்த, சிங்கள பேரினவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட பாலச்சந்திரன் உள்ளிட்ட அத்தனை சிறுவர்களையும் நான் இந்த இடத்தில் நினைவுகூருகிறேன்.” என தெரிவித்து உரையாற்றிய பொழுது தொடர்ந்தும் உரையாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது.