தேமுதிக யாருடன் கூட்டணி?
|
தேமுதிக கூட்டணி தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்காத போது நாம் மட்டும் முந்திரிக் கொட்டை போல் அவசரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் நடைபெற்ற மாநாட்டில் லட்சக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். |
|
இந்த மாநாட்டை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இதன்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன்பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், வெறும் ரசிகர் மன்றமாக தொடங்கப்பட்டு, இன்று தேமுதிகவாக வளர்ந்து நிற்கிறது. விஜயகாந்திற்கு முதல் வெற்றியை கொடுத்த மாவட்டம் கடலூர். இந்த மாவட்டம் விஜயகாந்தின் கோட்டை. 2006 சட்டசபைத் தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விஜயகாந்த் வென்றார். அப்போது அனைவருடனும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் இப்போது நினைவுக்கு வருகிறது. விஜயகாந்த் இல்லாமல் நாம் யாரும் இல்லை. கோயம்பேடு அலுவலகத்தில் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார். பணம் கொடுக்காமல் விஜயகாந்த் என்ற சொல்லுக்காக வந்த கூட்டம் இது. யாருடன் தேமுதிக கூட்டணி என்பதை தொண்டர்கள் முடிவு எடுப்பார்கள். தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. இந்த தேர்தலில் ஆட்சியில் அமரப் போவது யார் என்பதை தேமுதிக முடிவு செய்யும். விஜயகாந்தின் குருபூஜையை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. வள்ளலார் போன்று வாழ்ந்தவர் விஜயகாந்த். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரின் ஆலோசனையையும் பெற்றோம். யாரெல்லாம் என்ன ஆலோசனை கொடுத்தார்கள் என்பதை நான் மட்டுமே தனியாக அமர்ந்து படித்தேன். மகன் என்பதால், விஜயபிரபாகரனிடம் கூட அதனை சொல்லவில்லை. யாருடன் கூட்டணி என்ற முடிவை எடுத்துவிட்டோம். அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழ்நாட்டில் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்கவில்லை. அதனால் நாமும் ஆலோசித்து, தெளிவாக சிந்தித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூறி இருக்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும். இத்தனை நாட்களாக சத்ரியனாக வாழ்ந்துவிடோம்.. இனி சாணக்யனாக வாழ வேண்டும். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்காத போது, நாம் முந்திரிக்கொட்டை மாதிரி அவசரப்பட தேவையில்லை. இதனால் நிதானமாக கூட்டணியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். |