ஊழல் மோசடி - கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் பிரதேச செயலர்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று-வடக்கு வாகரை பிரதேச செயலாளர் திரு. சுப்ரமணியம் ஹரன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாகரை பிரதேச செயலகப் பிரிவில் இவரது கடமைக் காலத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் அப்பிரதேச வாழ் மக்கள் பல முறைப்பாடுகளை அரசாங்க உயர் மட்டங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருப்பதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது.
பிரதேச மக்களின் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் கணக்காய்வுத் திணைக்களம், பொதுச்சேவைகள், அரச சேவைகள், மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் புலனாய்வு விசாரணைப் பிரிவுகள் மேற்கொண்டுவந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அதேவேளை கொழும்புக்கு மாற்றலாகிச் செல்கின்ற இந்த பிரதேசசெயலாளர் பொறுப்புக்கள், கடமைகள் ஏதும் வழங்கப்படாது கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதேச செயலாளர் திரு. சு.ஹரன் அவர்கள் இதற்கு முன்னரும் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமை புரிந்த போது சில காலங்கள் மட்டக்களப்பு கச்சேரியில் பெறுப்புக்கள் ஏதும் வழங்கப்படாமல் பணிபுரிந்ததாகவும், அதன் பின்னரே வாகரை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலங்காலமாக அப்பாவி மக்களால் பயிர் செய்கை பண்ணப்பட்ட காணிகளில் இருந்து மக்களை வெளியேற்றி மோசடியாக ஆவணம் தயாரித்து பெரும் தொகை பணத்திற்கு விற்பனை செய்தமை, மக்களுக்காக வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலர் உணவுப் பொருட்களின் நிதி மோசடி செய்தமை, அரச நிர்வாக துஸ்பிரயோகம் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வாகரைப் பிரNதுசத்தில் பணியாற்றுகின்ற குறிப்பிட்ட சில தமிழ் அதிகாரிகள் மீது அந்த பிரதேச மக்களால் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.