பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை !

29.07.2022 09:29:31

பிரித்தானிய பிரதமர் போட்டியில் முன்னணியில் திகழும் 42 வயதான முன்னாள் திறைசேரியின் தலைவரான ரிஷி சுனக், தனது பிரசார அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

அடுத்த பிரதமருக்கான இறுதிப் போட்டியில் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் நேற்று (வியாழக்கிழமை) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘நிறைவேற்றுவேன்’ என உறுதியளிக்கும் பிரசார அறிக்கையை வெளியிட்டார்.

இதில், * பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை முற்றிலும் ஒழிக்கப்படும் வரை தேசிய அவசரநிலையாக கருதப்படும். 2 பெண் குழந்தைகளின் தந்தை என்ற முறையில் அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் மாலையில் நடந்து செல்லவும், இரவில் கடைகளுக்குச் செல்லவும் விரும்புகிறேன்.

* நான் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். பெண்களின் அனுமதியின்றி அந்தரங்கப் படங்களை எடுத்து அவர்களை துன்புறுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, அத்தகைய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்களை வேட்டையாடும் ஆபத்தான குற்றவாளிகளைப் பிடிப்பதைத் தடுக்க முடியாது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையைக் பாதுகாப்பாகவும், பத்திரமாகமும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குகிறவரையில் நான் ஓய மாட்டேன்.

* நான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சந்தேகப்படும் நபர்கள் தங்களிடம் ஏன் அந்த சிறுமிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் தொடர்பு விபரங்கள் உள்ளன என்பதை விளக்குமாறு கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆபத்தான குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து முடிவெடுக்க சட்ட அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

* வெளிநாட்டு குற்றவாளிகள் நாடு கடத்தல் உத்தரவைத் தவிர்க்க மனித உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க உரிமைகள் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவேன்.

இதனால் பெண்கள் மத்தியில் அவருக்கு புதிய ஆதரவு அலை உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.