ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்!

06.10.2024 11:01:43

இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை தாக்கியது. இதனால் இஸ்ரேல் பதிலடியாக லெபனான் நாட்டில் ஹெஸ்புல்லா அமைப்பினர் செயல்படும் இடங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர், அவரது மருமகன் மற்றும் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஹெஸ்புல்லாவை ஆதரித்து வரும் ஈரான், எதிர்பாராத விதமாக இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றை ராக்கெட் முறியடிப்பு சாதனங்கள் மூலமாக இஸ்ரேல் பெருமளவு தகர்த்தது.

நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் லெபனானின் திரிபோலி பகுதியில் வான்வழி தாக்குதலை நடத்தியது. அதில் 250 மீட்டர் நீளமுள்ள ஹெஸ்புல்லாவின் ரகசிய பதுங்கு சுரங்கபாதை தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அலா நயீப் அலி என்ற நபர் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இவர் லெபனானில் ஹெஸ்புல்லா உதவியுடன் ஹமாஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததுடன், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை திட்டமிட்டு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.