ஊடகவியலாளரான ஹரேந்திரனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

13.01.2022 05:01:50

ஊடகவியலாளரான கிருஸ்ணசாமி ஹரேந்திரனுக்கு ஊடகப் பரப்பில் சர்வதேச ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கையில் டிஜிட்டல் ஊடக கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் MediaInc திட்டத்தில் ஹரேந்திரன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னணி ஒளி,ஒலிபரப்பு நிறுவனங்களில் பல சிரேஸ்ட பதவிகளை வகித்துள்ள ஹரேந்திரன், பி.பி.சீ போன்ற உலகின் முதனிலை செய்தி நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் மூன்று ஊடகவியலாளர்களும் அவர்களது ஊடகங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஊடகப்பரப்பில் சாதகமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கின்றது.

டிஜிட்டல் ஊடகத்தின் உள்ளடக்கம், வர்த்தகமயமாக்கல் மற்றும் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயப்பரப்புக்களில் தெளிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளதுடன், அவர்களது ஊடங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட உள்ளன.

மக்கள் தகல்களை பெற்றுக்கொள்வதற்கான அவகாசத்தை வியாபிப்பதற்கும், மாற்று செய்தி மூலங்களை வலுப்படுத்துவதற்கும் இந்த முனைப்புக்கள் வழியமைக்கும் என ஜனநாயக இலங்கைக்கான ஊடகவலுவூட்டல் Media Empowerment for a Democratic Sri Lanka (MEND) திட்டம் தெரிவித்துள்ளது.

நம்பகமானதும், பக்கச்சார்பற்றதுமான செய்திகளை மக்கள் எளிதில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.