ஐ.நா.வில் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

13.12.2023 04:00:00

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது. பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன. அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன. இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.