சலுகைகள் குறித்த தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை

21.10.2024 08:09:28

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது பாரியார்களின் சலுகைகளை குறைப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்காக அரசாங்கம் காத்திருப்பதால் இன்னும் அது குறித்த தீர்மானம் எட்டப்படவில்லை என உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்கள் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவர்களின் மனைவிகள் ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின்படி வீடுகள், வாகனங்கள் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளுக்கு உரிமையுடையவர்கள்.

அத்தகைய சலுகைகளை குறைக்க அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது, ஆனால் சட்டம் அதற்கு தடையாக உள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் தேர்தல் வாக்குறுதியை வழங்கினார். இருப்பினும், சட்டத்தின் காரணமாக அதை எளிதாக செய்ய முடியாதுள்ளது.

சட்டம் திருத்தப்படுமா என்ற கேள்விக்கு, அது குழுவின் பரிந்துரைகளைப் பொறுத்தது என்று குறித்த உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒரு கார், ஒரு ஜீப் மற்றும் ஒரு இரட்டை வண்டி உட்பட மூன்று வாகனங்களுக்கு உரித்துடையவர்.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேலதிக வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.