இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
ஈரான் செவ்வாயன்று (01) கிட்டத்தட்ட 200 பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக வீசியது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அண்மைய ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் கொலைகளுக்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
பீதியில் மக்கள் தஞ்சம் அடைந்தபோது இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் கேட்டன, மேலும் தீப்பிழம்புகள் வானத்தை ஒளிரச் செய்தன.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதலில் சுமார் 181 ஏவுகணைகள் ஏவப்பட்டன.
ஈரானால் ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன, எனினும் சில ஏவுகணைகள் சேதத்தை ஏற்படுத்தியதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.
பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு பின்னர் ஜெருசலேமுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடத்தில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், தெஹ்ரான் “இன்றிரவு ஒரு பெரிய தவறை” செய்துவிட்டதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஈரானின் முக்கிய கூட்டாளியான ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கடந்த வாரம் இஸ்ரேல் கொன்றதையும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரை ஊடுருவலைத் தொடங்கியதையும் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.