6 இந்திய தூதுவர்களை வெளியேற்ற உத்தரவு!
இந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதுவர்களை கனடா திங்களன்று (14) வெளியேற்ற உத்தரவிட்டது.
கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.
இதற்குப் பதிலளித்த இந்தியா, கனடாவில் உள்ள தனது உயர்மட்ட தூதரக அதிகாரியை திரும்பப் பெறுவதாகக் கூறியதுடன், ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்தது.
திங்கட் கிழமை (14) பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் இது குறித்து பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,
கனடாவில் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு முகவர்கள் ஈடுபட்டதற்கான “தெளிவான மற்றும் நம்பகத் தகுந்த ஆதாரங்களை” ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் (RCMP) கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இரகசிய தகவல் சேகரிக்கும் நுட்பங்கள், தெற்காசிய கனேடியர்களை குறிவைத்து பலவந்தமான நடத்தை மற்றும் கொலை உட்பட பல அச்சுறுத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும் என்று கூறினார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய முகவர்களைத் தொடர்புபடுத்துவதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதிலிருந்து, 2023 செப்டெம்பர் முதல் இந்தியா-கனடா உறவுகள் பதட்டமாக உள்ளன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்தவர் ஆவார். இவர் ஒரு சீக்கிய தாயகத்தை ஆதரித்தார் மற்றும் 2020 ஜூலையில் இந்திய அரசால் “பயங்கரவாதி” என்று அடையாளமிடப்படார்.