பாஜக கூட்டணிக்கு விஜயை அழைத்த பவன்கல்யாண்!

08.03.2026 12:59:24

தவெக தலைவர் நடிகர் விஜயிடம் ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதாகவும் அதன் அடிப்படையில் விஜய் அதிமுக-பாஜக கூட்டணிக்கு விரைவில் வரப்போவதாகவும் செய்திகள் வருகின்றன எனக் கூறியிருக்கிறார் அரசியல் விமர்சகரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நடப்பது என்ன என்கிற வகையில் இன்றைய பரபரப்பான சூழலில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது! நான் பவன் கல்யாணுக்கு எவ்வளவு நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

உண்மையில் தமிழகத்தைப் பொறுத்தவரை பவன் கல்யாண் தேசிய ஜனதாக் கூட்டணியில் எப்படியாவது விஜயை இணைத்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அது உண்மையில் மிக முக்கியமான ஒரு அரசியல் நடவடிக்கை ஆனால் விஜய் யுடன் இருக்கக்கூடிய சில மோசமான சக்திகள் வழியாக அது தடைபட்டுக் கொண்டே இருந்தது. அவர்கள் எக்காலமும் நாம் பிஜேபியுடனோ அதிமுகவுடனோ போகக்கூடாது என்பதில் அவரை வழி நடத்தி அவரது அரசியல் இணைப்பை முன்னெடுப்பை வெறுமையாக்கிக் கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அதற்கு முன்பு விஜய்யை பாஜக உடன் இணைத்து ஒரு புதிய அரசியல் மாற்று வழியை கண்டுபிடிப்பதற்கான குறிப்பாக திமுகவை அரசியல் நீக்கம் செய்ய வேண்டியதன் முனைப்பாகவும் தமிழக மக்களை அதன் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு தீவிரமான முயற்சியாக அது இருந்தது. ஒரு கட்டத்தில் நான் பவன் கல்யாண் அவர்களின் ஜனசேனா தமிழக தலைவராக இருப்பதற்கான வாய்ப்பு இருந்த போது தெலுங்கானாவில் ஜனசேனாவை வலுப்படுத்திவிட்டு பிறகு தமிழ்நாட்டுக்கு வரலாம் என்று அவர்சொன்னார். அவர் சொன்னதன் பிறகுதான் அவரது வழிகாட்டுதலின் பேரில் நான் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தேன்.

இந்நேரத்தில் பவன் கல்யாண் அவர்கள் எனக்கு வசதியாக ஆந்திராவின் துணை முதல் அமைச்சரானார். அப்படியான அளவில் நான் பவன் கல்யாண் அவர்களுடன் நெருக்கமாக இருந்தேன். அந்நேரத்தில் பவன் கல்யாண் விஜயிடம் சொன்னார். திருப்பதியில் நடந்த பெரும் மாநாட்டில் ஏகப்பட்ட கூட்டம் வந்த போதும் எனது அண்ணன் சிரஞ்சீவியால்அங்கு வெற்றி பெற முடியவில்லை! நானும் கூட வெற்றி பெற முடியவில்லை. அதன் அடிப்படையில் ஒரு சாணக்கியத்தனத்தை மேற்கொள்ளா விட்டால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியுடன் குறிப்பாக தெலுகு தேசம்-பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்று ஜன சேவா அரசியலைத் தக்க வைத்துக் கொண்டேன்.

அதேபோல் விஜயும் தனியாக நிற்பதாக சொல்லிக்கொண்டு ஏமாறாமல் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தனக்குரிய அரசியல் இடத்தைப் பெற முயல வேண்டும். அந்த வகையில் அதிமுக பாரதிய ஜனதாக் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டால் அவருக்கும் எதிர்காலம் உண்டு. இப்படியான எதிர்காலம்குறித்துத்தான் அந்நாளில் நான் விஜய்யிடம் பேசினேன். ஆனால் அது அவருக்குப்புரியவில்லை. இது குறித்து பேசும்போதெல்லாம் அவர் ஏதோ ஒரு வழியில் சரி என்கிறார் என்றாலும் இது குறித்து ஒருபோதும் அவரால் முடிவெடுக்க இயலவில்லை.

தன்னுடைய ரசிகர்களின் உற்சாகமான ஆதரவுகளை நம்புவதை விட இந்திய அரசியலின் நுட்பமான கடந்த காலப்பார்வைகளை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.அதைப் புரிந்து கொண்டால் உங்களுக்கும் எதிர்காலம் உண்டு என்று நான் அவரிடம் சொன்னேன். இவ்வளவுக்கு பிறகும் விஜய் வரவில்லை. திரும்பவும் அவரிடம் நான் பேசினேன். அந்த வகையில் இதுவரை அவரிடம் எந்த ஒரு தெளிவான முடிவு எதுவும் இல்லை என்பதுதான் சிக்கலாக இருந்தது . திரும்பவும் பவன் கல்யாண் மூலம் இக் கூட்டணி சார்ந்து விஜய்க்கு தன் எதிர்காலம் குறித்து முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகத்தான் உள்ளது.

இதுதான் இன்றறைய எதார்த்த நிலை! நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள்! உங்களிடம் இது குறித்து பவன் கல்யாண் பேசினாரா? அடுத்தடுத்த நிலைமைகள் என்ன என்பதில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என் வீட்டில் இருந்து கொண்டே இம்மாதிரியான கேள்விகளை எதிர்பார்ப்புகளை நான் எதிர் கொண்டு தான் இருக்கிறேன்!. அதிமுக தலைவர் எடப்பாடியும் மாவட்டச் செயலாளர்கள் சிலரும் இது குறித்து சில நம்பிக்கையான தகவல்களை கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்கு அது என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை! விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வருவாரா போவாரா என்பது குறித்து தெளிவான முடிவு எதையும் என் அளவில் சொல்வதற்கில்லை. ஆனால் பவன் கல்யாண் இது குறித்து பேசி உள்ளது உண்மைதான்.. அவர்தான் இன்றைய சூழலைச் சொல்ல முடியுமே ஒழிய விஜய் கூட்டணிக்கு வருகிறார் வரமாட்டார் என்பதெல்லாம் சரியாகவே உறுதியாகவோ இதுவரை சொல்ல முடியவில்லை.ஆனால் , காலம் மாறும் காட்சிகளும் மாறும்! வாய்ப்புகள் உள்ளன." என கூறியுள்ளார்.