தனியார்மயமாகிறதா ரயில்வே?
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வே துறை தனியார் மயமாக்கம் என்ற கேள்விக்கு இடமில்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே துறை முற்றிலும் மாற்றம் அடைந்து வருகிறது என்றும் குறிப்பாக, வந்தே பாரத் ரயில் இந்த மாற்றத்திற்கு வழிவகுக்கிறது என்றும், இது ரயில்வே மாற்றத்திற்கான சகாப்தம் என்றும் தெரிவித்தார்
"ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு துறைகளும் ஒரு நாட்டின் முதுகெலும்புகள். அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இவ்விதமான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
400 ரூபாய் கட்டணத்தில் 1000 கிலோமீட்டர் வரை மக்கள் வசதியாக பயணம் செய்யும் ஒரே துறை ரயில்வே துறை. எனவே, ரயில்வே தனியார் மயமாக்கப்படும் பேச்சுக்கே இடமில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பிரதமர் மோடி ஆட்சியில், ரயில்வே பட்ஜெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக புல்லட் ரயில், பிரத்தியேக சரக்கு ரயில் ஆகியவற்றுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.