ரூ.3 கோடி தங்கம் கடத்தல்

10.05.2022 15:58:43

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 மோட்டார் இயந்திரங்களில் மறைத்து வைத்து, கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் பிடிபட்டு உள்ளது.  லக்னோ மற்றும் மும்பை நகரங்களில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்த தங்க கடத்தல் சம்பவம் தெரிய வந்துள்ளது.

 

இதனை மத்திய நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.  இதன்படி, மும்பை நகரில் இறக்குமதியான 2 மோட்டார் இயந்திரங்களுக்குள் 5.8 கிலோ எடை கொண்ட ரூ.3.10 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டு உள்ளது.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இறக்குமதியாளர் தெற்கு மும்பையை சேர்ந்தவர்.  அவரை விசாரணைக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.  பின்னர் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

 

இதற்கு முன்பு, லக்னோவில் கடந்த 5ந்தேதி இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.  இறக்குமதியான சரக்கு ஒன்றை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர்.

 

இதில், 5.2 கிலோ எடையுடைய ரூ.2.78 கோடி மதிப்பிலான தங்கம் இயந்திரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.  இதனால், தொடர்ந்து ஒரே வாரத்தில் 2வது முறையாக கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.