தலிபான்கள் இஸ்லாமிய புனித நூலான அல் குர்ஆன் ஐயும் தங்களது மார்க்கத்தையும் முற்று முழுதாக கடைப்பிடிக்கிறார்களா ?

20.08.2021 04:00:00

தலிபான்கள் இஸ்லாமிய புனித நூலான அல் குர்ஆன் ஐயும் தங்களது மார்க்கத்தையும் முற்று முழுதாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை ஆராய்ந்து பாப்போம்.

1. இஸ்லாம் மதம், பாலியல் அடிமைகள் (Sex slaves) வைத்திருப்பதை அனுமதிக்கவில்லை.

ஆதாரம் :

"அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் அவர்களுடன் உடலுறவு செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? என்று பதிலளித்தார்கள்"

(ஹதீஸ் புகாரி 6603)

ஆனால் இன்றும், வேற்று பெண்களையும் மற்றும் ஒரு ஆண் தமக்கு துரோகம் செய்து மரண தண்டனை கொடுக்கப்பட்ட பின் அவரின் பாதுகாப்பில் இருக்கும் பெண்கள் சிலரை பலவந்தமாகவும் தலிபான்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்.

2. தற்கொலை செய்து கொள்வதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.

ஆதாரம் :

"அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரை 'இவர் நரகவாசிகளில் ஒருவர்' என்று கூறினார்கள்.

போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்கார வைத்து விட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து 'அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்' என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் 'அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம்' என்றே கூறினார்கள்.

அப்போது முஸ்லிம்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து சந்தேகப்படும் அளவுக்குப் போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தம் கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.

உடனே முஸ்லிம்களில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கி விட்டான். இந்த மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகி விட்டார்' என்று கூறினர்.

(ஹதீஸ் புகாரி 6606)

ஆனால் தலிபான்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களையும் இறைவனின் பெயரால் செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.

3. போதைப்பொருள் பாவிப்பது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் போதைப்பொருள் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது.

மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் அனைத்தும் இஸ்லாமில் ஹராமாக்கப் பட்டு உள்ளது என்றார்.

(அபூதாவூத்)

ஆனால்  உலக சந்தையில் ஒபியம் (opium) என்னும் போதைப்பொருள் ஆப்கானிஸ்தானிலேயே பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தாலிபானின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 50% இந்த போதைப்பொருள் உற்பத்தி மற்றும் அதன் கடத்தலில் தான் கிடைக்கிறது.

இஸ்லாமியர்களில் மிக சொற்பமானவர்கள் எப்போதும் பிறரில் தவறுகளை தேடிக்கொண்டே இருப்பவர்கள். தமது சமயத்தவர்களை தவிர ஏனையோர் அனைவருமே தவறாவர்கள் என்ற போக்குடையவர்கள். தாமும் தம் இனத்தவரும் எதைச் செய்தாலும் அதுவே சரி என கண்மூடித்தனமாக வாதாடுபவர்கள்.

அவர்களை தவிர, இஸ்லாம் ஒரு அன்பு மதம் என்பதையும் அது ஒரு புனித மார்க்கம் என்பதையும் புரிந்து கொண்ட எந்த இஸ்லாமியரும் தாலிபானை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.