சீறிப் பாய்ந்த வடகொரிய ஏவுகணை
அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பை அச்சுறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியுள்ளது.
வியாழன் (31) ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 86 நிமிடங்கள் பறந்தது – இது வடகொரிய ஏவுகணைகளில் ஒன்றின் மிக நீண்ட நேர பயண நேரமாக அமைந்தது.
அதேநேரம், சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் 7,000 கி.மீ உயரத்தில் பறந்து ஏவுகணை சாதனை படைத்தது.
ஏவுகணை சோதனை ஏவுதலில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கொரிய அரச செய்திச் சேவையான KCNA தெரிவித்தது.
ICBM வகை ஏவுகணை அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை (31) காலை 7:11 மணிக்கு பியோங்யாங்கிற்கு அருகில் இருந்து வடகிழக்கு நோக்கி ஏவப்பட்டது.
சுமார் 86 நிமிடங்கள் இந்த ஏவுகணை ஹொக்கைடோவின் ஒகுஷிரி தீவுக்கு மேற்கே ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் காலை 8:37 மணியளவில் விழுந்தது.
இதனால், விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி,
வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களின் வளர்ச்சி நமது தேசம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. எனவே அவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றார்.
உக்ரேனுக்கு எதிரான போருக்கு ஆதரவாக வட கொரியாவின் படையினர் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில் இந்த ஏவுதல் வந்துள்ளது.