கப்பல் சேவை நவம்பர் மாதம் நிறுத்தம்!

22.10.2025 11:58:04

பருவநிலை மாற்றம் காரணமாக நாகை காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் மேலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது.

இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

 

நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிற நிலையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது எனவும் அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படுவதுடன் இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது எனவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளின் காலநிலை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நிகழாண்டு நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.