பிரதிநிதிகள் சபையை கைப்பற்றுகிறது டிரம்ப் கட்சி

10.11.2022 07:53:41

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்தது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. செனட் சபையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் 21 இடங்கள் எதிர்க்கட்சியான டிரம்பின் குடியரசு கட்சிக்கும், 14 இடங்கள் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கும் உரித்தானவை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தலா 48 இடங்களுடன் சம நிலையில் உள்ளன. 4 இடங்களுக்கு முடிவு வரவேண்டி உள்ளது. நெவேடா, ஜார்ஜியா, விஸ்கான்சின், அரிசோனா ஆகிய 4 மாகாணங்களில் இருந்து வருகிற முடிவுதான் செனட் சபை யாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை நிர்ணயிக்கும். அரிசோனாவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் கெல்லி முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியாவிலும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ரேபேல் வாமோக்ஸ் முன்னணியில் உள்ளார். நெவேடாவில் குடியரசு கட்சி வேட்பாளர் ஆடம் லக்சால்ட் முன்னிலை பெற்றுள்ளார். விஸ்கான்சினில் குடியரசு கட்சி வேட்பாளர் ரோன் ஜான்சன் முன்னணியில் இருக்கிறார். எனவே ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் என்ற நிலை வரலாம். அப்படிப்பட்ட சூழலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சிக்கு ஓட்டு போடுவார் என்பதால் ஜோபைடனின் ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் செனட் சபை வந்து விடும். பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 199 இடங்களும், ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு 178 இடங்களும் கிடைத்துள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. ஆனாலும் இன்னும் 58 இடங்களுக்கு முடிவு வர வேண்டி உள்ளது. எனவே டிரம்பின் குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி விடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எஞ்சிய 2 ஆண்டுகள் தலைவலியாக அமையும்.