மௌனமாக இருந்த ரணில் - பின்னணி என்ன ?

15.08.2021 10:18:31

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் கலந்துக்கொண்டு, ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளதாக சிறி கொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கலந்துக்கொண்ட ரவி கருணாநாயக்க, கட்சிக்குள் காணப்படுகின்ற தவறுகள் குறித்து மிக ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் தனக்கும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அர்ஜுன் அலோசியசிற்கும் எதிராக பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்து தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அப்போது விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் கபீர் ஹஷிம் தொடர்பில் எவரும் கருத்து வெளியிடவில்லை என கூறிய ரவி கருணாநாயக்க, இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே கபீர் ஹஷிம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் தனித்தனியாக பிரிந்து செயற்பட்டமையே, இந்த நிலைமைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கும், நாட்டிற்கும் செய்த சேவைகள் தொடர்பில் பிரசாரம் செய்யவில்லை. 

எனினும், நல்லாட்சி அரசாங்கம் செய்த வேலைகள் தொடர்பில் தற்போதே மக்கள் பேசுகின்றனர் எனவும் அவர் நினைவூப்படுத்தியுள்ளார்.