புலனாய்வாளர்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் – சுமந்திரன்

20.10.2021 05:02:06

“அதிபர்கள், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தைப் புலனாய்வாளர்களைக் கொண்டு அரசு அச்சுறுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மோசமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நேற்றிரவு இலங்கைக் கடலில் உயிர்நீத்த இந்திய மீனவர் ராஜ்கீரனின் உறவுகளுக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு வன்முறையற்ற வகையிலேயே தீர்வைக் காண நாம் முயற்சிக்கின்றோம்.

மீன்பிடி அமைச்சர் வன்முறையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்களை இழுத்து வருமாறு கோரியிருந்தார். ஆனால், நாம் கடலில் இறங்கிப் போராடியபோதும் சட்டத்தை அமுல்படுத்துமாறே கோரினோம்.

அரசு சட்டத்தைத் தெளிவாக நடைமுறைப்படுத்தினால் இவ்வாறான உயிர்ச் சேதங்களையும் தடுக்கலாம்.

இழுவை மடி மீன்பிடித் தடையானது இரு நாட்டு அரசுகளும் இணங்கிய விடயம். உள்ளூர் ரோலர் தொழில் செய்யும் குருநகர் மீனவர்கள் 6 வருடங்களுக்கு முன்பு என்னோடு பேசியபோது 6 மாத கால அவகாசமே கோரினர். இதேபோன்று இந்திய மீனவ அமைப்புக்களுக்கும் இது பாதிப்பு என்று தெரியும். ஆனாலும் அனுமதியுங்கள் என்கின்றனர். எனவே, இதனை முழுமையாக தடை செய்யுமாறே கோருகின்றோம்.

இதேநேரம் எம்மால் கடலில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தைச் சிலர் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாகக் காட்டி போராட்டத்தை வலுவிலக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். உண்மையில் இழுவை மடி மீன்பிடி முறைமையைத் தடுக்க வேண்டும் என்பதில் இந்திய அரசும் இணங்கியமையால் இது இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல.

இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தில் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதிபர்கள், ஆசிரியர்களை அரசு தனது ஏவல் நாய்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துகின்றது. தொழிற்சங்கப் போராட்டமானது அவர்களின் உரிமை. எனவே, அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானவை. அவர்களின் போராட்டத்துக்கு எமது ஆதரவை நாம் வழங்குவோம் நாம் துணை நிற்போம்” என்றார்.