இரணைதீவை தெரிவு செய்யதன் நோக்கம் தமிழ் – முஸ்லிம் உறவை பிரிக்கச் சதி !!!

03.03.2021 09:34:43

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம் – இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவைப் பிரிக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே அடக்கம் செய்ய அரசு தயங்குவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாசாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களுக்கு மதிப்பளித்து அவற்றை அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மைய வாடிகளில் அடக்கம் செய்ய அரசு முன்வர வேண்டும். முஸ்லிம் சகோதரர்களின் விருப்பமும் அதுவே எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.