
கிளீன் ஸ்ரீலங்கா.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு சிறுபான்மை பிரதிநிதியொருவரின் பெயரைக் கூட பரிந்துரைக்காத ஐக்கிய மக்கள் சக்திக்கு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தில் சிறுபான்மையினர் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு தகுதியில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். |
'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 18 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை உள்ளிட்ட துறையுடன் தொடர்புடையோர் அக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் இக்குழுவின் சில வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும். ஓரிரு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்துக்கு மாத்திரமின்றி ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் நீண்டகால வேலைத்திட்டமாக இதனை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 'கிளீன் ஸ்ரீலங்கா' என்ற வேலைத்திட்டம் அனைத்து இலங்கையர்களுக்குமானது. எனவே இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் மதம் அல்லது இனங்களுக்கு முக்கியத்துமளிப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. அந்த அடிப்படையில் இதற்கான குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுமில்லை. எனவே இந்த வேலைத்திட்டத்தில் எவருக்கும் இணைய முடியும். எனவே இந்த விடயத்தில் இதற்காக இனம் மற்றும் மதத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலைப்படுத்துகிறது என்பது எமக்கு தெரியாது. பாராளுமன்றத்தில் பிரதம கொறடாவாக சிறுபான்மை இனத்தவர் ஒருவரது பெயரை பரிந்துரைக்காத ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தின் மீது இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்? அக்கட்சிக்கு இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்க தகுதியில்லை என்றார். |