மோடியின் 'மாஸ்டர் பிளான்'!

16.04.2026 08:25:28

தேர்தல் களத்தில் 'பெண்' வாக்குகள் தான் கிங் மேக்கர் என்பதை உணர்ந்தே, மகளிர் இடஒதுக்கீடு எனும் துருப்புச் சீட்டை கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. இது வெறும் சட்ட மசோதா தானா அல்லது தேர்தல் அஸ்திவாரமா? இந்த மசோதாவின் பலன் என்ன? தமிழகம் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல் ஜுரம் இப்போதே பற்றிக்கொண்டுள்ள நிலையில், டெல்லியிலிருந்து கிளம்பியிருக்கும் 'மகளிர் இடஒதுக்கீடு' மற்றும் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) எனும் புயல், இந்திய அரசியலை ஒரு சுழற்றுச் சுழற்றிக் கொண்டிருக்கிறது. "மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியணும், தொகுதி மறுவரையறை நடக்கணும்.. இதெல்லாம் முடிஞ்சு பெண்கள் நாடாளுமன்றத்துக்குள்ள போக 2034 ஆயிடும்" என எதிர்க்கட்சிகள் இதுவரை கிண்டலடித்து வந்தன.

 

ஆனால், 'ரிவர்ஸ் கியர்' போட்ட மத்திய அரசு, இதையெல்லாம் தாண்டி மசோதாவைத் துரிதப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் வாயடைக்கப் பார்க்கிறது. இன்று (ஏப்ரல் 16, 2026) நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாக்கள் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன. 1. என்ன நடக்கிறது இன்று? மத்திய அரசு மூன்று முக்கிய மசோதாக்களை இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை: 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, 2026: இதுதான் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மற்றும் நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்கும் 'மாஸ்டர் பிளான்'.

தொகுதி மறுவரையறை மசோதா, 2026 (Delimitation Bill): தொகுதிகளைப் பிரிப்பதற்கான புதிய ஆணையத்தை உருவாக்குவது. யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதா. '850' - புதிய நாடாளுமன்ற மேஜிக் தற்போது 543 ஆக இருக்கும் மக்களவை (Lok Sabha) இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுத்தாலும், தற்போது இருக்கும் ஆண் எம்பிக்களின் வாய்ப்புகள் குறையாது என அரசு வாதிடுகிறது. அதாவது, பெண்களுக்கு 33% இடங்கள் போக, மீதமுள்ள 67% இடங்களே தற்போதைய 543 இடங்களை விட அதிகமாக இருக்கும் காலக்கெடு மாற்றப்பட்டது (Reversing the Clock) இதற்கு முன்பு 2023-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி (Nari Shakti Vandan Adhiniyam), அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு (Census) பிறகுதான் இடஒதுக்கீடு வரும் என்று இருந்தது.

ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின்படி: மக்கள்தொகை கணக்கெடுப்புக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. பாராளுமன்றம் தீர்மானிக்கும் 'சமீபத்திய கணக்கெடுப்பு' (தற்போதைய சூழலில் 2011 கணக்கெடுப்பாக இருக்க வாய்ப்பு) அடிப்படையில் தொகுதி மறுவரையறையை உடனே தொடங்கலாம். இதன் இலக்கு: 2029 பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்வது.. இங்கே தான் பாஜகவின் லேயர் லேயரான அரசியல் ஒளிந்திருக்கிறது. பெண் ஓட்டு வங்கி: கடந்த பத்து ஆண்டுகளில் சைலன்ட் புரட்சியாக உருவெடுத்திருப்பது பெண் வாக்காளர்கள் தான். மம்தா பானர்ஜி முதல் தமிழகத்தின் நலத்திட்டங்கள் வரை பெண்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

இப்போது "நாங்கள் வெறும் இலவசங்களை மட்டும் தரவில்லை, அதிகாரத்தையே தருகிறோம்" என பிம்பத்தை கட்டமைக்கிறார் மோடி. எதிர்க்கட்சிகளின் சிக்கல்: இந்த மசோதாவை எதிர்க்கவும் முடியாது (பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற முத்திரை குத்திவிடுவார்கள்), ஆதரிக்கவும் முடியாது (முழு கிரெடிட்டையும் பாஜக தட்டிச் சென்றுவிடும்). குறிப்பாக OBC உள் ஒதுக்கீடு இல்லை என்கிற வாதத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தற்காப்பு ஆட்டம் ஆடி வருகின்றன. தெற்கின் பயம் நியாயமானதா? அடுத்ததாக, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயம் 'தொகுதி மறுவரையறை'. மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தெற்கு மாநிலங்கள் தண்டிக்கப்படுமா? என்கிற கேள்விக்கு மத்திய அரசு ஒரு 'மேத்தமேட்டிக்கல்' பதிலை வைத்திருக்கிறது.

நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்தினால், யாருக்கும் சீட் குறையாது, மாறாகக் கூடும் என்கிறது டெல்லி. அந்தப் புதிய கணக்கின்படி:

தமிழ்நாடு: 39 ➔ 59 இடங்கள்

கேரளா: 20 ➔ 30 இடங்கள்

கர்நாடகா: 28 ➔ 42 இடங்கள்

ஆந்திரா: 25 ➔ 37 இடங்கள்

"யாரும் எதையும் இழக்கவில்லை, எல்லோருக்கும் உயர்வு தான்" என்பது மத்திய அரசின் வாதம். ஆனால், இங்கே தான் தி.மு.க போன்ற கட்சிகள் நுட்பமாக ஒரு பாயிண்ட்டைப் பிடிக்கின்றன. "எண்ணிக்கை கூடினாலும், ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் 'வெயிட்டேஜ்' (Relative Power) குறையுமே? வட மாநிலங்கள் அதிக இடங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்துமே?" என்பதுதான் ஸ்டாலினின் பிரதான கேள்வி. அதாவது வடஇந்தியாவில் மட்டும் வென்று தென்னிந்தியா இல்லாமலே ஆட்சி அமைக்க முடியுமே! என்ற சரியான வாதம் வைக்கப்படுகிறது. பெங்கால் டூ தமிழ்நாடு.. என்ன நடக்கும்? மேற்கு வங்கத்தில் மம்தாவின் 'பெண் வாக்கு' பலத்தைக் குறைக்க பாஜக இதைப் பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டிலோ, இதை ஒரு மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நகர்வாக தி.மு.க மாற்றி வருகிறது. பாஜக முன்வைப்பது: வளர்ச்சி, அதிக இடங்கள், பெண் அதிகாரம். எதிர்க்கட்சிகள் முன்வைப்பது: சமநிலை, கூட்டாட்சி, உள் ஒதுக்கீடு. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுமா என்பது இப்போதும் 'மில்லியன் டாலர்' கேள்விதான். ஆனால், மசோதா நிறைவேறுகிறதோ இல்லையோ, "நாங்கள் முயற்சி செய்தோம்" என்கிற அரசியல் லாபத்தை அறுவடை செய்ய பாஜக தயாராகிவிட்டது. எதிர்க்கட்சிகள் இந்தச் சிக்கலான சதுரங்க வேட்டையில் அடுத்த நகர்வை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே 2026 மற்றும் 2029 தேர்தல் முடிவுகள் அமையும்!