இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக?
மக்களவை தேர்தல் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்குப் பிறகு, 'இந்தியா' கூட்டணியின் மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் இன்று புதுடெல்லியிலுள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறுகிறது. கடந்த 2024 ஜூன் மாதத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக நடைபெறும் இந்த முதல் கூட்டத்தில், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அண்மைய தேர்தல் பின்னடைவுகளுக்கு பிறகு கூட்டணியை மறுசீரமைக்கவும், வரவிருக்கும் மாநில தேர்தல்கள் மற்றும் 2029 மக்களவை தேர்தலுக்கான கூட்டு வியூகங்களை வகுக்கவும் இக்கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்கள் இக்கூட்டத்தின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
குறிப்பாக, திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய முக்கியக் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், கேரளா தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ(எம்) விளக்கம் கோரவுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.