'தலைமை செயலகம்' இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

10.05.2024 07:10:00

முன்னணி டிஜிட்டல் தளங்களில் ரசிகர்களுக்காக புதிய விறுவிறுப்பான இணைய தொடர்கள் உருவாகி வெளியாவது தற்போதைய ட்ரெண்ட். அந்த வகையில் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் நடிகர் கிஷோர் உள்ளிட்ட தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர கலைஞர்கள் நடித்திருக்கும் 'தலைமை செயலகம்' எனும் அரசியல் திரில்லர் வகையிலான அசல் இணைய தொடர் வெளியாகிறது. இந்த இணையத் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஜீ5 டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து இந்த இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'அங்காடித் தெரு' எனும் விருது பெற்ற படைப்பை வழங்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஜி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தலைமை செயலகம்' எனும் புதிய அசல் தமிழ் இணைய தொடரில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா, சித்தார்த் விபின், வை. ஜி. மகேந்திரா, சந்தான பாரதி, கவிதா பாரதி, கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணைய தொடருக்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். அரசியல் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த விறுவிறுப்பான இணைய தொடரை ராடான் மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராதிகா சரத்குமார் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த இணைய தொடரின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. மாநில அரசியல் +மத்திய அரசியல்+ ஊழல் போராட்டம் +கட்சி நடவடிக்கை +காவல்துறையின் நடவடிக்கை என அரசியலை சார்ந்த காட்சிகள் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைக்கப்பட்டிருப்பதாலும், கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அரசியல் ரீதியான கருத்தியல்களையும், சமகால அரசியலையும் பேசுவதாலும் 'தலைமை செயலகம்' இணையத் தொடரை காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.