5 ஆண்டு காதல்... திருமணத்திற்கு மறுப்பு

01.03.2023 15:32:56

ஆந்திர பிரதேசத்தின் காகிநாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் லீலா பவித்ரா நீலாமணி (வயது 25). கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள தனியார் சுகாதார நலன் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து உள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் சுகாதார நல நிறுவனத்தில் தன்னுடன் ஒன்றாக பணியாற்றிய, ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த தினகர் பனாலம் (வயது 28) என்பவரை பவித்ரா காதலித்து வந்து உள்ளார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்வது என முடிவு செய்து தினகர் அதுபற்றி காதலியிடம் கேட்டு உள்ளார். ஆனால், சற்று காலம் கடத்திய பவித்ரா, சமீபத்தில் தனது குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருவரும் வேறு, வேறு சாதி என்பதனால், குடும்பத்தில் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த திருமணத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களது முடிவின்படியே நடக்க இருக்கிறேன் என்று தினகரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினகர், காதலியை பழி வாங்க நினைத்து உள்ளார். இதற்காக, நேற்று இரவு பவித்ராவின் அலுவலக வாசலில் காத்து இருந்து உள்ளார். வேலை முடிந்து பவித்ரா வெளியே வந்ததும், அவருடன் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில் தன்னுடன் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, தினகர் காதலியை 15 முறை குத்தியுள்ளார். இதனை சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்த கொடூர தாக்குதலில் பவித்ரா உயிரிழந்து விட்டார். அதன்பின்பும் ஆத்திரம் தீராமல், இறந்த காதலியின் உடல் மேல் தினகர் அமர்ந்து உள்ளார். சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வரும்வரை தினகர் காதலியின் உடல் மீது அமர்ந்தபடி இருந்து உள்ளார். அதன்பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.