பிரான்ஸில் தேசிய நாள் !

14.07.2022 11:11:00

மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, மக்களாட்சி கொண்டுவரப்பட்ட தேசிய நாள் இன்று. ஜூலை 14, 1789 ஆம் ஆண்டு Bastille சிறைச்சாலை கிளர்ச்சியாளர்களால் உடைக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அன்றைய நாளையே பிரான்சின் தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பரிசில் இன்று, தேசிய நாள் நிகழ்வுகள் பெரும் பாதுகாப்பின் கீழ் கொண்டாடப்பட உள்ளன. காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தம் 12,000 அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, நாடு முழுவதும் 125,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற உள்ள் நிகழ்வுகளில் 6,300 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களில் 5,000 வீரர்கள் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்கின்றனர். 64 விமானங்கள், 25 உலங்குவானூர்திகள், 200 குதிரைகள், 181 கவச வாகனங்கள் அணிவகுப்பில் ஈடுபட உள்ளன.

ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், இராணுவ அமைச்சர், இராணுவ தளபதி உள்ளிட்ட தலைவர்களும், அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

இன்றைய தேசிய நாள் நிகழ்வுகள் ‘யுத்தத்துக்குள் சிக்கியுள்ள உக்ரைன்’ குறித்த சில விடயங்களை பிரதிபலிக்க உள்ளன. குறிப்பாக உக்ரைனைச் சுற்றியுள்ள நாடுகள் இந்த இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன. Estonia, Latvia, Lithuania, Poland, Czech Repulique, Slovakia, Hungary, Romania மற்றும் Bulgaria போன்ற நாடுகளின் இராணுவத்தினர் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

இவ் ஆண்டுக்கான ஜூலை 14 தேசிய நாளுக்காக தயாரிக்கப்பட்ட சுவரொட்டியில் ‘Partager la flamme’ எனும் வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை NATO கொடியில் 6 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த குறியீடுகள் அனைத்தையும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உக்ரைன் ஜனாதிபதி Zelensky காணொளி மூலம் உரையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.