புளோரிடாவில் அழிந்துவரும் கடல் பசு இனங்கள்...!
உலக அளவில் இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக்பெருங்கடல் உள்ள 30 நாடுகளில் இந்த கடல் பசுக்கள் வசிக்கின்றன.
கடல் பசுக்கள் பாலூட்டி வகையைச்சேர்ந்த உயிரினமாகும். நன்கு வளர்ந்த கடல் பசு 10 அடி நீளமும், 250 முதல் 300 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் குட்டிகள் 3 அடி நீளமும், 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்டதுமாக இருக்கும். இதன் ஆயுட்காலம் 70 ஆண்டுகளாகும். 6 வயது முதல் 17 வயது வரை இனப்பெருக்கம் செய்யும் காலம். இதன் தலை மற்றும் முக அமைப்பு வட்ட வடிவிலும் தாடை கீழ் நோக்கியும் இருக்கும். லேசான ரோமங்களுடன் மென்மையான தோல் அமைப்புகொண்டது கடல் பசு. கடலுக்கு அடியில் உள்ள நிலத்தடியில் வளரும் கடல் புற்களை உணவாக உட்கொள்ளும் கடல் பசுக்கள் அரிய வகை உயிரினங்களாகும்.
உலக அளவில் இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக்பெருங்கடல் உள்ள 30 நாடுகளில் இந்த கடல் பசுக்கள் வசிக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பட்டினி காரணமாக கரந்த ஓராண்டில் மட்டும் 1000 கடல் பசுக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடல் பசுக்களின் உணவான கடற்புற்கள் அழிந்து வருவதே இதற்கு காரணம் என கடல் உயிரின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புளோரிடாவில் தற்போது 7,000 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடலில் தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி துண்டுகள் கலப்பதால் கடலின் தரைப்பகுதிகளில் உள்ள கடல் புற்கள் அழிந்துவிடுகிறது. இதனால் கடல் பசுக்கள் உண்ண உணவில்லாமல் இறந்துவிடுகின்றன.
அரிய கடல் வாழ் உயிரினங்களான டால்பின், திமிங்கலம் ஆகிவற்றிற்கு ஒப்பாக கருதப்படும் கடல் பசுக்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது, கடல் வாழ் உயிரின ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது. கடல் பகுதியில் அழிந்து வரும் கடல் பசு இனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.