காதலியுடன் இணைந்து 500 கோடி ருபா மோசடி
கலென்பிந்துனுவெவ பிரதேச மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி 500 கோடி ரூபா மோசடி செய்த நபரும் அவரது காதலியும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வலையமைப்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் “ட்ரெட்வின் ஷேர்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி குறித்த நபர் பணத்தை மோசடி செய்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்த பணத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 39 வயதுடைய நபரும் அவரது காதலியும் இன்று (27) பிற்பகல் நாரஹேன்பிட்டியில் உள்ள சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வலையமைப்பு மோசடி விசாரணை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.