15 வயதில் சிரியாவுக்கு ஓடிப்போன ஜேர்மன் இளம்பெண்...

20.05.2022 10:56:02

ஜேர்மன் இளம்பெண் ஒருவர், 15 வயதில் ஒரு மாணவியாக இருந்தபோது, ஜேர்மனியிலிருந்து ஐ. எஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியாவுக்கு ஓடினார்.

தற்போது 22 வயதாகும் Leonora Messing என்ற அந்த இளம்பெண், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்ச்சைக்குரிய மீட்பு நடவடிக்கை ஒன்றின்போது குழந்தைகளுடன் சேர்ந்து ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தார். ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் பொலிசார் அவரைக் கைது செய்தார்கள்.

Leonora மீது, தீவிரவாத அமைப்பு ஒன்றில் இணைந்ததாகவும், யாஸிடி இனப்பெண் ஒருவரை அவரும் அவரது கணவரும் அடிமையாக வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய ஜேர்மனியின் Halle நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, Leonoraவும் அவரது கணவரும், ஐ.எஸ் அமைப்பில் இரகசிய உளவாளியாக இருந்தவருமான Martin Lemke (30)என்னும் ஜேர்மானியரும், யாஸிடி இனப்பெண் ஒருவரை அடிமையாக வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

ஆகவே, Leonora தீவிரவாத அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருந்ததற்காகவும், சட்டவிரோதமாக பல ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதையும் உண்மையான தண்டனை என்று கூறமுடியாது. அதாவது, Leonora இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவருக்கு தண்டனை வழங்கப்படும், அவ்வளவுதான்...

ஆக, ஜேர்மனியிலிருந்து தீவிரவாத அமைப்பு ஒன்றில் இணைவதற்காக சிரியாவுக்கு ஓடிய ஒரு பெண், தற்போது சுதந்திரமாக ஜேர்மன் மக்களுடன் நடமாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!