இஸ்ரேலுக்கான ஆதரவை ஜெர்மனி திரும்பப் பெற்றது!
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகத் தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில், இஸ்ரேலுக்கு ஆதரவாகத் தலையிடப் போவதில்லை என ஜெர்மனி அறிவித்துள்ளது.
ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஜோசப் ஹின்டர்செஹர், "சர்வதேச நீதிமன்றத்தின் இந்த விவகாரத்தில் ஜெர்மனி இனி தலையிடாது" என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெர்மனியின் இந்தத் திடீர் பின்வாங்கலுக்குப் பின்னால் ஒரு முக்கியமான சட்டச் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஜெர்மனியும் இனப்படுகொலைக்குத் துணை போவதாக நிகரகுவா (Nicaragua) நாடு சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு தனி வழக்கை ஏற்கனவே தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கில் ஜெர்மனி தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
"நிகரகுவா தொடுத்த வழக்கில் நாங்கள் இப்போது ஒரு தரப்பாக இருக்கிறோம். எனவே, எங்களது முழுக் கவனத்தையும் அந்த வழக்கில் செலுத்த முடிவு செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் மிக நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ஜெர்மனியின் இந்த முடிவு, சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை தோற்றுவத்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.