"டியாகோ கார்சியாவை விட்டுக்கொடுக்க கூடாது".

19.02.2026 14:08:47

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பிரித்தானிய அரசு டியாகோ கார்சியா தீவை “விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று எச்சரித்துள்ளார். இரான் ஒப்பந்தத்தில் இணங்காவிட்டால், அமெரிக்கா அந்தத் தீவைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், “இரான் ஒப்பந்தம் செய்ய மறுத்தால், அமெரிக்கா டியாகோ கார்சியா மற்றும் Fairford விமான தளத்தைப் பயன்படுத்தி, ஆபத்தான தாக்குதலைத் தடுக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர், “இது பிரித்தானியா மற்றும் நட்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதலாக இருக்கலாம்” என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 100 ஆண்டு கால வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது “பெரிய தவறு” என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

“இது பிரித்தானியா தனது கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்” என்றும், “அறியப்படாத அமைப்புகளின் போலியான உரிமைக் கோரிக்கைகள் மூலம் பிரித்தானியா நிலத்தை இழக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்ட், “ஜனாதிபதியின் இந்த கருத்துகள், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகக் கருதப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

டியாகோ கார்சியா, இந்தியப் பெருங்கடலில் உள்ள Chagos Archipelago தீவுகளில் மிகப்பெரியது. 1970-களிலிருந்து இது பிரித்தானிய-அமெரிக்க இராணுவத் தளமாக பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, தீவின் உரிமை மொரீஷியசுக்கு மாற்றப்படுகின்றது. ஆனால், இராணுவத் தளம் குறைந்தது 99 ஆண்டுகள் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் தொடரும்.

இந்த எச்சரிக்கை, அமெரிக்கா-இரான் இடையிலான பதற்றம் அதிகரிக்கும் சூழலில் வெளியாகியுள்ளது.