வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் மீது வழக்கு
வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்ததாகவும், இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் உள்பட 542 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மாவட்டச் செயலாளர், முன்னாள் எம்பி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு, அலுவலகம் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் 16 இடங்களிலும், கோவையில் 45, காஞ்சிபுரம், திண்டுக்கல் என தலா ஒரு இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அதில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ். பி. வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது, நேற்று காலை முதல் மாலை வரை வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
அவர்களுக்கு காலையில் டிபன், மதியம் தக்காளி, தயிர்சாதம் வழங்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்யும் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
தகராறும் செய்தனர். அதேபோல, வேலுமணியின் பினாமி என்று கூறப்படும் வடவள்ளி சந்திரசேகரின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரை விசாரணைக்காக வெளியில் அழைத்துச் சென்றபோது அவர்களை அதிமுகவினர் தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனால், ஊரடங்கு நேரத்தில், சட்டவிரோதமாக மக்களை கூட்டி வந்து கோஷமிட வைத்ததாகவும், அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும் அதிமுக எம். எல். ஏக்கள் அம்மன் கே. அர்ஜூனன், ஏ. கே. செல்வராஜ், பி. ஆர். ஜி. அருண்குமார், தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன், கே. ஆர். ஜெயராம், அமுல் கந்தசாமி, எம். எஸ். எம் ஆனந்தன், வி. பி. கந்தசாமி மற்றும் முன்னாள் எம். எல். ஏ-க்கள் எட்டிமடை சண்முகம், ஓ. கே. சின்ராஜ், கஸ்தூரி வாசு உள்ளிட்ட 542 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல், தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.