கோட்டாபயவை கைது செய்ய ஒப்பமிடுவோம்!

25.07.2022 10:46:24

கையெழுத்து போராட்டம்

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினையும் கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது [ஒப்பமிடுவதற்கான இணைப்பு https://chng.it/rQVfCj4KdQ ] இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப்பினை விடுத்துள்ளார்.

 

மேலும் தெரிவிக்கையில், "சிறிலங்காவின் முன்னாள் அதிபர் இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்தவர். இதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு (additional protocol 1) இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் நாம் இந்தக் கோரிக்கைகளை சிங்கப்பூர் சட்ட மா அதிபரினை நோக்கி முன்வைக்கின்றோம்.

சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட, ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும், அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமா அதிபருக்கு உண்டு என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

மேலும் 2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் முன்னாள் செயலாளர் பான் கி மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும் சிறீலங்காவின் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம், தமிழர்கள் அங்கு அரசியல் நீரோடையில் இல்லை என்றும்" the root caused is the conflict ....."என்று கூறியிருப்பதையும் மற்றும் 2021ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பஷிலேற் அவர்களும் (dangerous exclusionary policy of the Sri Lankan Government) என்று அதாவது அங்கே ஜனநாயகம் தலைதூக்கி இருப்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டி, மேலும் சிறீலங்கா ஒரு இனவாத அரசு, அரச கட்டமைப்புக்கள் நீதிமன்றம் உட்பட சிங்களத்தை மையப்படுத்தி இருப்பதால் அங்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையும் நாம் இம் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறிலங்காவில் நடந்த இந்தக் குற்றங்கள் அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை, அல்குசேன் மற்றும் தற்போதைய ஆனையாளர் மிசேல் பசேலே ஆகியோர் நாடுகளை நோக்கி முன்வைத்த கோரிக்கையினையும் எமது கோரிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

கோட்டாபய ராஜபக்‌சே திரும்பவும் கொழும்பிற்கு திரும்பினால், அவர் அங்கு ஊழல் குற்றங்களுக்காகவே நீதியின் முன்னால் நிறுத்தப்படுவாரேயன்றி, தமிழனப் படுகொலைக்காகவோ, மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கு எதிராகவோ, போர்க்குற்றங்களுக்காவோ நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார். தற்சமயம் சர்வேந்திர டி சில்வா இன்னொரு இனப்படுகொலையாளி. இன்னொரு போர்க்குற்றவாளி. இன்று அங்கு ஒரு முக்கிய பதவியை வகித்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் அங்கு தமிழர்களுக்கான நீதி ஒருபோதும் கிடையாது.

எனவே சிங்கப்பூர் கோட்டாபயவைக் கைது செய்து விசாரித்து நீதியின் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாயகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சார்பாகவும், புலத்தில் வசிக்கும் தமிழர்கள் சார்பாகவும், உலகத்தில் தமிழர்கள் சார்பாகவும் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைத்து இந்தக் கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளோம்.

இது உடனடியாக செய்ய வேண்டிய விடயம். ஏனெனில் ராஜபக்‌ச எந்த சமயமும் சிங்கப்பூரை விட்டு வெளியேறி விடுவார் எனவே விரைவாக இதில் அனைவரும் கையெழுத்து இட்டு உலகளாவிய தமிழர்களின் கோரிக்கை இது என்பதை சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு நாங்கள் எடுத்துரைப்போம்" என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.