
என்னைப்போன்ற ஒரு தலைவரை கண்டதுண்டா?"
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் பாமகவின் 'சித்திரை முழு நிலவு மாநாடு' நடைபெற்று வருகிறது. இம் மாநாட்டில் பாமக சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு மாநாட்டு கொடியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாநாட்டு மேடையில் ராமதாஸ் பேசுகையில், ''குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் என்று சொல்வார்கள். அதே போன்று பூத்துள்ளோம். |
குரு இல்லையே, இருந்திருந்தால் தொடர்ந்து இந்த மாநாட்டை அவர் நடத்தி இருப்பார். அவர் இல்லையே என்ற ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டுக் கொண்டு இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒன்றை சொல்லயிருக்கிறேன். 10.5 10.5 10.5 என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர கொடுக்கிற மாதிரி இல்லை. அதனால் போராட்டத்தை அறிவியுங்கள். அதைத்தான் நீங்கள் எதிர்பார்த்து வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத ஒரு போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். கிராமத்தில் சொல்வார்கள் மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது. அதற்கு அடுத்த வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை. அந்தப் போராட்டத்திற்காக நாம் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். 45 ஆண்டு காலமாக உங்களுக்காக, இந்த மக்களுக்காக, 324 சமுதாயங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அத்தனை மக்களுக்காகவும் போராடி, வாதாடி வெற்றி பெற்ற ஒருவன் இந்த ராமதாஸ். ஜெயபாஸ்கர் எழுதி, புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பார் 'இந்தியாவிலே இதுபோன்று ஒரு தலைவரை கண்டதுண்டா' என்று, நானும் இப்பொழுது கேட்கிறேன் இதுபோன்று 34 வகையான அமைப்புகள், போராட்டங்கள், இட ஒதுக்கீடு போராட்டங்கள், சமூக நீதிக்கான போராட்டங்கள் எல்லாம் இந்தியாவில் வேறு யாராவது ஒரு மனிதர் செய்திருக்கிறாரா? யாரும் இல்லை. என்னைப் போன்று யாரும் இல்லை. நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததினால் எனக்கு வெளிச்சம் போட்டு காட்ட ஆள் இல்லை. ஊடகங்கள் மறைத்தார்கள் இப்பொழுது வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சொல்லுகிறேன் என்னைப் போன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, சமூகநீதியாக இருந்தாலும் சரி உழைத்த ஒரு தலைவர். என்னை நான் தலைவர் என்று சொல்வதில்லை. இந்தியா கண்டதுண்டா என புஷ்பவனம் குப்புசாமி பாடினாரே அது போல யாராவது இருக்கிறார்களா? இந்தியாவில் யாருமே இல்லை என்னை தவிர. நான் இது பெருமையாக சொல்லிக் கொள்ள தயாராக இருக்கிறேன். 45 ஆண்டுகள் தொடர்ந்து உங்களுக்காக உழைத்து வருகிறேன்'' என்றார். |