அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு புதிய தடை நகர்வுக்கும் ஏற்பாடு !
அமெரிக்காவில் நேற்று ஆரம்பமாகி இன்றும் தொடந்த ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படாதமை அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு கிட்டிய மிகப்பெரிய அவமானமாக மாறியிருக்கிறது.
வெள்ளை மாளிகையில் இருந்து காணொளி மூலம் ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டை நடத்திய அமெரிக்க அரசதலைவர் ஜோபைடனுடன் 100இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் குடிசார் தலைவர்களும் நேற்றும் இன்றும் இணைந்திருந்தனர்.
சிறிலங்காவுக்கு இந்த மாநாட்டு அழைப்பு விடுக்கப்படாதமை அனைத்துலக அரங்கில் அதற்கு கிட்டிய மிகப்பெரிய அவமானமாக மாறியிருந்த நிலையில்,
சிறிலங்காவில் ராஜபக்சக்களின் எதேச்சாதிகாரம் மற்றும் அவர்களின் சீன ஆதரவு நிலையை ஊடறுத்து ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடக்கூடிய ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அமெரிக்காவில் இருந்து அதிக ஆதரவு மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என்ற செய்தி மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனநாயகத்துக்கு சவால் விடுக்கும் நாடுகளில், ஜனநாயகத்தை மீட்கும் வகையிலும் சுதந்திரமான ஊடகங்களை கட்டமைக்கும் வகையிலும் உருவாக்கப்படும் செயற்றிட்டத்துக்கு 424 மில்லியன் அமெரிக்க டொலருக்குரிய நிதியுதவி திட்டத்தையும் பைடன் அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் கருத்து தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைக் குறிவைக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டை செயற்றிட்டத்துரிய ஆண்டாக பிரகடனப்படுத்தி மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு புதிய தடை நகர்வுகளை எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.