அஜித் ஓட்டிய கார் பாலைவனத்தில் கவிழ்ந்து விபத்து!?

05.04.2024 00:14:20

விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் டூப் இல்லாமல் கார் ஓட்டியபோது விபத்துக்குள்ளான காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது.
 

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். அஜித்தின் சமீபத்திய படங்கள் தாமதமாகவே வெளியானாலும் காத்திருந்து பார்க்க ரசிகர்கள் தயாராக உள்ளனர். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பெரும்பான்மையான ஆக்‌ஷன் காட்சிகள் அஜர்பைஜானில் வைத்து படமாக்கப்பட்டன. நீண்ட காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில்தான் படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ள அஜித் கார் விபத்து வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ஸ்டண்ட் டபுள் இல்லாமல் தானே காரை வேகமாக ஓட்டி செல்கிறார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்கிறது. இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட படத்திற்கான ஆக்‌ஷன் காட்சியாக தெரிகிறது.
இந்த காட்சியை அந்த காருக்குள்ளும் கேமரா வைத்து படம் பிடித்துள்ளார்கள். அதில் அஜித் கார் ஓட்டுவதும், விபத்திற்கு உள்ளாவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித்குமார் தனது உயிரையும் பணயம் வைத்து இதுபோன்ற ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வருவது பலருக்கும் வியப்பையும், அதேசமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.