பண்ட் செய்த மிகப்பெரிய தவறு.. முன்னாள் வீரர் கடும் கண்டனம்

22.05.2022 09:59:34

டெல்லி கேப்பிடல்ஸ் அணித்தலைவர் ரிஷப் பண்ட் டிஆர்எஸ் எடுக்காமல் விட்டது அந்த அணியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடந்தது. டெல்லி அணி வாழ்வா சாவா என்ற நிலையில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.

முதலில் ஆடிய டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோகித் சர்மா 2 ஓட்டங்களில் வெளியேற, ரிஷப் பண்ட் மற்றும் ப்ரேவிஸ் நல்ல அடித்தளம் அமைத்தனர்.

அதன் பின்னர் வந்த டிம் டேவிட் அதிரடியில் மிரட்டினார். அப்போது டிம் டேவிட் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் அவுட் தர வில்லை. அதனை எதிர்த்து பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் டிஆர்எஸ் கேட்கவில்லை, அணித்தலைவர் ரிஷப் பண்ட்டும் டிஆர்எஸ் எடுக்கவில்லை. பின்னர் கேமராவில் பார்த்தபோது பந்து பேட்டில் உரசிதான் சென்றது.

டிஆர்எஸ் எடுக்காதது டிம் டேவிட்டுக்கு சாதகமாக அமைந்துவிட, அவர் 11 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இதனால் டெல்லி அணி பரிதாபமாக வெளியேறியது. ஒருவேளை பண்ட் டிஆர்எஸ் எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கலாம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி டெல்லி அணியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், 'அவர்கள் (டெல்லி அணியினர்) தங்களை மட்டுமே குற்றம் சொல்லிக்கொள்ள வேண்டும். வேறு காரணமே சொல்ல முடியாது. மும்பை இந்தியன்ஸ் வென்றார்கள் என்பதை விட நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள் என்றே கூறுவது சரியாக இருக்கும். உங்களை விட RCB தான் பிளேஆப் சுற்றுக்கு தகுதியானவர்கள்.

பொது அறிவு என்ன சொல்கிறது? சரி, ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூரை விட்டு விடுவோம். அணியில் இருந்த மற்றவர்கள் என்ன செய்தார்கள்? பொது அறிவு தேவை. டிம் டேவிட் அப்போது தான் வந்தார். ஐந்து ஓவர்களில் இரண்டு டிஆர்எஸ் இருந்தது. இன்னும் இரண்டு விக்கெட்டுகளை விரைவில் எடுக்க உங்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. நீங்கள் எடுத்திருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.