பதவி நீக்கம் தொடர்பில் மஹிந்த அமரவீர

01.04.2024 00:46:56

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைக்கால நடத்தைகள் அவரது மனநிலை சரியாக இல்லை என்பதையே புலப்படுத்துகிறது. முறையான காரணிகள் எவையும் முன்வைக்கப்படாமலேயே நாம் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றோம். எம்மை ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரிக்க முடியாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முறையான காரணமொன்று இன்றியே எம்மை பதவிகளிலிருந்து நீக்கியுள்ளனர். விசேட கலந்துரையாடலொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, அவர் மாத்திரம் தனது கருத்துக்களை முன்வைத்து எமக்கு எவ்வித கருத்துக்களையும் முன்வைப்பதற்கு இடமளிக்காது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். ஆனால் சரியான குற்றச்சாட்டுக்கள் கூட எம்மீது முன்வைக்கப்படவில்லை.

கூட்டணி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். எதற்காக அந்த வழக்கு தொடரப்பட்டது என்பதை அவரும் நன்கு அறிவார். எவ்வாறிருப்பினும் இந்த நாட்களில் அவரது நடத்தைகளில் தடுமாற்றம் காணப்படுகிறது. அவரால் தெரிவிக்கப்படும் கருத்துக்களிலிருந்து, அவரது மனநிலையும் சரியாக இல்லை என்பது தெளிவாகிறது.

எவ்வாறிருப்பினும் இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக நாம் நிச்சயம் நீதிமன்றம் செல்வோம். எமக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படும் என்பதை நாம் முன்னரே அறிந்திருக்கவில்லை. கட்சி உறுப்புரிமை நீக்கப்படவில்லை. பதவிகளிலிருந்து மாத்திரமே நீக்கப்பட்டிருக்கின்றோம். இதனை ஏகாதிபத்தியமாகவே நாம் பார்க்கின்றோம்.

நாம் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக் கொண்டதை இதற்கான ஒரு காரணமாகக் குறிப்பிடவில்லை. எம்மை பதவி துறக்குமாறும் குறிப்பிடவில்லை. அது தான் காரணம் எனில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மத்திய குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்க மாட்டார். அவர் நாம் எதற்காக பதவிகளை ஏற்றிருக்கின்றோம் என்பது தொடர்பில் தெளிவாக விளக்கமளித்துள்ளார். எனவே ஒரு பிரச்சினை அல்ல என்றார்.