'பாமகவுக்கு வெற்றி ஒன்றே இலக்கு'

15.07.2022 11:09:31

 பா.ம.க. 34-வது ஆண்டு விழா நாளை கொண்டாட உள்ள நிலையில், வெற்றி ஒன்றே இனி இலக்காக இருக்க வேண்டும் என்று தொண்டர்களை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை, பா.ம.க. 34-வது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு அரசியல் பயணிக்கும் பாதையை தீர்மானிக்கும் சக்தியான பா.ம.க., இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்து நாளை 34-வது ஆண்டைத் தொடங்குகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்து பாதிப்பை போக்குவது பா.ம.க. தான். மக்கள் நலனுக்காக ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், திட்டங்களையும் மட்டும் தான் பா.ம.க. முன்வைக்குமே தவிர, பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ச்சைகளை எழுப்புவதையோ, அவதூறு பரப்புவதையோ ஒருபோதும் செய்ததில்லை, இனியும் செய்யாது. தமிழ்நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு சமூகநீதி, கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் நாம் படைத்த சாதனைகளின் பட்டியல் மிகவும் நீளமானது

. ஆனால், பா.ம.க. தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில் இந்த சாதனைகளை மட்டும் நினைத்து நாம் மனநிறைவடைந்து விட முடியுமா?

மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து இவ்வளவு நன்மைகளை செய்த நாம், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் இன்னும் பல மடங்கு நன்மைகளை செய்யலாமே? ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கும் அனைத்து யோசனைகளையும் நாமே செயல்படுத்தலாமே? ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க.வின் ஆண்டு விழா கொண்டாடப்படும் போதெல்லாம் டாக்டர் ராமதாஸ் இந்த வினாக்களைத் தான் முன்வைக்கிறார்.

நானும் அதே வினாக்களைத் தான் எழுப்புகிறேன். நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். பா.ம.க.வை பொறுத்தவரை வெற்றி மட்டும் தான் இனி நமது ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க இந்த நாளில் உறுதியேற்க வேண்டும். பா.ம.க.வின் 34-வது ஆண்டு விழாவையொட்டி அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும். பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.