நாமே பலமான எதிர்க்கட்சி’
அமையவிருக்கும் புதிய பாராளுமன்றத்தில், புதிய ஜனநாயக கட்சி அதிகமான ஆசனங்களை பெற்று வலுவான ஒரு எதிர்க்கட்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை என திகாமடுல்ல மாவட்ட நான்காம் இலக்க வேட்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார்
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
“இந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது தனது அனுபவத்தாலும், சமயோசித செயற்பாடுகளாலும் ஆக்கபூர்வமான முயற்சிகளைச் செய்து ஒரு ஸ்திரமான நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இட்டுச் சென்றார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவர்.
ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இந்த நாட்டை பொறுப்பெடுத்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பியது மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் பசியை போக்கி அத்திய அவசிய தேவைகளுக்காக மக்கள் வரிசையில் நின்ற அந்த அவல நிலையையும் இல்லாமலாக்கி எதிர்மறையாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை நேரான பொருளாதார வளர்ச்சி வீதத்துக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான பணியை அவர் செய்திருந்தார். இந்தப் பணி இந்த நாட்டு மக்கள் இன்று நிம்மதியாக வாழ்வதற்கு வழி வகுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் புதிய ஜனநாயக கட்சியில் போட்டியிடுகின்ற எங்களது கட்சிக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகின்ற நிலையை நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதன் அடிப்படையில் இக்கட்சி மாவட்டத்தில் 3 ஆசனங்களை பெறக்கூடிய நிலைமை உருவாகியிருக்கிறது.
இந்த வெற்றி வாய்ப்புக்கு நீங்களும் பங்காளிகளாகும் வகையில் உங்கள் பெறுமதியான வாக்குகளை எனக்கு அளித்து நேர்மையான அரசியலுக்கு அதிகாரத்தை தோற்றுவிக்க பங்களிப்பு செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.