இருமுனை போருக்கு தயார்.

17.10.2025 14:52:50

இருமுனை போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் உடன் எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசீப் தெரிவித்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானுடன் மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவுடனான மோதல் பதற்றங்கள் அதிகரித்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அதாவது இருமுனை போருக்கு தயாராக இருப்பதாகவும் காஜா ஆசீப் தெரிவித்துள்ளார்.

    

 

சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றில் பாதுகாப்பு அமைச்சர் காஜா ஆசீப், ஆப்கானிஸ்தானுடன் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி இந்தியா சதி செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், அதை நிச்சயமாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

அதே சமயம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுடனான உரையாடல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பதற்றமான நேரத்தில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், வகுக்கப்பட்ட திட்டங்களை பொதுவெளியில் விவரிக்க முடியாது என்றும், ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.