சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் நீடிப்பு

28.07.2021 10:19:42

 

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு அதிகளவில் பரவுவதால் ஜூன் மாத இறுதியில் இருந்து சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

குறிப்பாக இந்த ஆண்டு சிட்னியில் கொரோனா தொற்று காரணமாக 2,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸில் இன்று புதிதாக 177 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடக்க கட்டுப்பாட்டை தளர்த்த முடியாது என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்பவர்களைத் தவிர மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்ரேலியாவில் அமுலில் இருந்த முடக்க கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.