ICC கிரிக்கெட் உரிமைகள் MTV செனல் லிமிட்டெட் வசம்
இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகளை 2025ஆம் ஆண்டு இறுதி வரை MTV செனல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) வெள்ளிக்கிழமை (13) அறிவித்தது.
MTV வலை அமைப்பின் இலவச ஒளிபரப்புச் சேவைகளான TV1, சக்தி டிவி மற்றும் சிரச டிவி மூலம் ஒளிபரப்பு உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும். www.sirasatv.lk, ICC TV ஆகியவை மூலம் டிஜிட்டல் உரிமைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ICC உலக போட்டி நிகழ்ச்சிகளை அதிகளவிலான ரசிகர்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இலங்கை சனத்தொகையில் பெரும்பகுதியினரை MTV வலை அமைப்பு உள்ளடக்கியிருக்கிறது. மேலும் நாட்டின் பிரதான மூன்று மொழிகளையும் உள்ளடக்கிய தொலைக்காட்சி சேவைகளை MTV வலை அமைப்பு கொண்டுள்ளதுடன் சகலவிதமான முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளையும் அர்ப்பணிப்புடன் நேரடி ஒளிபரப்பு செய்யும் விளையாட்டுத்துறை தொலைக்காட்சி சேவையையும் கொண்டுள்ளது.
ICCக்கும் MTV வலை அமைப்புக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் ICC ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் 2024, ICC மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2024, ICC 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2025, ICC ஆடவர் சம்பியன்ஸ் கிண்ணம் 2025, ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025 மற்றும் ICC உலகக் கிண்ண கிரிக்கெட் 2025 ஆகியன அடங்குகின்றன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலார்டிஸ்,
'MTVயுடன் பங்குதாரர் ஆவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது எங்கள் ஒளிபரப்பு பங்காளிகள் கட்டமைப்பில் ஓர் அற்புதமான இணைப்பாகும். கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் விளையாட்டை ரசிக்கக்கூடிய அதிகமான ரசிகர்களை உருவாக்க இந்த பங்காளித்துவம் ஓர் அருமையான வாய்ப்பாகும்' என்றார்.
photo icc rights to mtc chevvan daniel
MTVயை உரமை கொண்டதும் அதன் சேவைகளை இயக்குவதுமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் செவான் டெனியல் கூறியதாவது:
'அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையில் உலக கிரிக்கெட் போட்டிகளை பிரத்தியேகமாக ஒளிபரப்புவதற்கான உரிமையை MTV வெற்றிகரமாக பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட்டுடன் பல தசாப்தங்களாக கெப்பிட்டல் மகாராஜா கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அற்புதமான பங்காளித்துவமானது எங்கள் பார்வையாளர்களுக்கு பெறுமதிமிக்க விளையாட்டு உள்ளடக்கத்தை வழங்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் எடுத்துக்காட்டுகிறது. இலங்கையர்களின் இதயங்களில் கிரிக்கெட் ஒரு விசேட இடத்தைப் பிடித்துள்ளது மேலும் விறுவிறுப்பை தோற்றுவிக்கும் இந்த உலகக் கிரிக்கெட்டை இலங்கை முழுவதும் ஒளிபரப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளைக் கண்டுகளிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க காத்திருக்கிறோம்' என்றார்.