பிரித்தானியாவில் புதிய பொது முடக்கம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எச்சரிக்கை!

06.01.2021 06:51:07

 

இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் வரை செல்ல வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அமைச்சரவை அலுவலக அமைச்சரான Michael Gove இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஏழு வாரங்களுக்குள் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

ஆனால், அப்படி சரியாக திட்டமிட்டபடி தடுப்பூசி போடப்படவில்லை என்றால், பொரிஸ் ஜோன்சன் அறிவித்தபடி பொதுமுடக்கம் பெப்ரவரி மாத இறுதியில் விலக்கிக்கொள்ளப்படாமல், மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என Michael Gove எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 60 ஆயிரத்து 916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு ஒரே நாளில் 830 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது.