ஆர்மீனியா-அஜர்பைஜான் எல்லை விவகாரம்

17.09.2022 10:36:04

ரஷிய அதிபர் புதின் ஆர்மீனியா-அஜர்பைஜான் மோதலில் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.
 

ஆர்மீனியா-அஜர்பைஜான் எல்லையில் 4400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட நார்கோனா காராபாக் மலை பகுதி தான் இரு நாடுகளுக்குமான எல்லையாக உள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என மோதல் நிலவுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நிலவுகிறது. 1988ம் ஆண்டு நடந்த எல்லை போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 1994ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது, நார்கோனா காராபாக் மலை பகுதி அஜர்பைஜான் நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.ஆனால் அப்பகுதியில் ஆர்மேனியா நாட்டு ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர்.அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இப்பகுதி உள்ளது.

2016ம் ஆண்டு முதல் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டது.2020ம் ஆண்டு அது போராக மாறியது.அப்போது ரஷியா தலையிட்டு அமைதிக்கு வழிவகுத்தது.அந்த போரில் 6000 பேர் வரை பலியாகினர். இந்த நிலையில், இந்த வாரம் அஜர்பைஜான் படைகள் ஆர்மீனியாவிற்குள் உள்ள குடியிருப்புகளைத் தாக்கி கைப்பற்றியதாக ஆர்மீனியா கூறுகிறது. மீண்டும் போர் பதற்றம் அதிகரித்தது.

ஆர்மீனியா-அஜர்பைஜான் சண்டையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு சண்டை முடிவுக்கு வந்தது. ரஷியா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஆர்மீனியா கேட்டுக் கொண்டது, ஆனால் இதுவரை அந்த அமைப்பு, ஒரு உண்மை கண்டறியும் குழுவை மட்டுமே அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதற்கு ஆர்மீனியா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ரஷியா மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ரஷியா ஆர்மீனியாவின் இராணுவ கூட்டாளியாகும், இது அஜர்பைஜானுடன் நட்புறவுக்காக செயல்படுகிறது.ஆகவே உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷிய அதிபர் புதின் ஆர்மீனியா-அஜர்பைஜான் மோதலில் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதலில் சமாதானம் ஏற்படுத்த ரஷியா போதுமான ஆதாரங்களைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.