விஜய்க்கு சிறிதரன் சபையில் வாழ்த்து!

06.05.2026 09:05:00

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவுசெய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்' என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

'புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ளீர்கள். மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த ஆணையை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி, 'ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாஷைகள் குறித்து உங்களது தெளிவான நிலைப்பாட்டினை நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம். தொப்புள்கொடி உறவுகளான எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும் உங்களது தலைமையிலான தமிழக அரசு முன்னின்று ஒத்துழைப்பு வழங்கும் என ஈழத்தமிழர்களாகிய நாம் பெரிதும் எதிர்பார்க்கிறோம்' எனவும் சிறிதரன் அவரது வாழ்த்துச்செய்தியில் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், 'தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரையும், அன்னையரையும் முழுமையாக இணைத்து சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு முதலமைச்சராகும் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.