ETR.FM

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

23.11.2026 09:10 2 நிமிட வாசிப்பு
மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!
நாட்டின் மேல் மற்றும் கீழ் மலைநாட்டுப் பகுதிகளில் பயிரிடப்படும் மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால், மரக்கறி வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் 950 முதல் 1,000 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கும், போஞ்சி 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், ஒரு கிலோ கிராம் கரட் 600 முதல் 700 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் 400 ரூபாய்க்கும், வாழைக்காய் 400 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 600 முதல் 650 ரூபாய் வரையிலும், வெள்ளரிக்காய் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், தக்காளி மற்றும் பாகற்காய் தலா 800 ரூபாய்க்கும், புடலங்காய் 600 ரூபாய்க்கும், நுவரெலியா உருளைக்கிழங்கு 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஒரு கிலோகிராம் எலுமிச்சம்பழம் 2,000 ரூபாய்க்கும், சிவப்பு வெங்காயம் 800 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பெய்து வந்த கடும் மழை காரணமாக மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால், சந்தையின் கேள்விக்கு ஏற்றவாறு மரக்கறிகளை விநியோகிக்க விவசாயிகளால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுவே விலையேற்றத்திற்குக் காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், நுகர்வோர் அவற்றைக் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளதாகவும், இதனால் தமது வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பூபாள விடியல்