ETR.FM

கைதடி வைத்தியசாலைக்கான புலம்பெயர் நிதியை தடுக்கிறது அரசாங்கம்!

26.11.2026 08:54 2 நிமிட வாசிப்பு
கைதடி வைத்தியசாலைக்கான புலம்பெயர் நிதியை தடுக்கிறது அரசாங்கம்!
“எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது எனத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் பொறுப்பேற்கவுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு 180 தாதியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அந்நியமனங்கள் வழங்கப்பட்டு ஒருசில நாட்களிலேயே 103 நியமனங்கள் பிறிதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. தற்போதும் அங்கு 105 வெற்றிடங்கள் காணப்படுகின்றன; இதுதான் உண்மை. அந்த வைத்தியசாலையில் அடிப்படை மருத்துவ வசதிகள்கூட இல்லை. வழங்கப்பட்ட நியமனங்களை இவ்வாறு மாற்றியமைப்பது முற்றிலும் தவறானது.வடக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும், இத்தீர்மானத்தை மக்கள் வரவேற்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரச வைத்தியசாலைகளிலேயே பல குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில், மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதால் எவ்வித மாற்றமும் ஏற்படாது.வடக்கு மாகாணத்தில் கடந்த 13 ஆண்டுகாலமாகச் சுகாதார சேவையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ‘எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை’ என்று குறிப்பிட்டுக்கொண்டு, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது;கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்படுகிறது. கைதடி ஆதார வைத்தியசாலைக்குச் சத்திரசிகிச்சை அறையை நிர்மாணிப்பதற்குப் பலமுறை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்காத நிலையில், அப்பிரதேச மக்கள் புலம்பெயர் உறவுகளின் உதவியை நாடினார்கள். அதற்கமைய, அவ்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கப் புலம்பெயர் உறவுகள் முன்வந்துள்ள நிலையில், அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை; அத்திட்டத்தை இழுத்தடிக்கும் வகையிலேயே செயற்படுகிறது” என்றார்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE உங்கள் விருப்பம்