ETR.FM

தடை செய்யப்பட்ட சின்னங்களை பயன்படுத்தியவர்கள் கைது!

29.11.2026 15:26 3 நிமிட வாசிப்பு
தடை செய்யப்பட்ட சின்னங்களை பயன்படுத்தியவர்கள் கைது!
வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். இதன்போது விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விடயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.    
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, வடக்கில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அதன்போது அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,இவர் பொய்யான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த சில தினங்களாக வடக்கில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் 2011இல் விடுதலைப் புலிகள் தடைச் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நினைவுகூருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய எதனையும் பயன்படுத்த முடியாது. அது தொடர்பான வர்த்தமானிக்கு அமைய இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். அது தொடர்பில் அவதானம் செலுத்தி, குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அப்பால் நடக்கும் சகல விடயங்கள் தொடர்பாகவும் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி மன்னாரில் பிரபாகரனின் உருவப் படத்தை காட்சிப் படுத்தி நடத்தப்பட்ட நிகழ்வு தொடர்பில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் முல்லைத்தீவு பகுதியில் அதுபோன்ற படத்தை காட்சிப்படுத்தி நிழ்வை நடத்திய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை திலீபன் தொடர்பான நிகழ்வு விடயத்தில் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலைமையில் சிலருக்கு தமது இருப்பை உறுதிச் செய்துகொள்ள இனவாதத்தை தூண்டி தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையுள்ளது. மக்கள் இனவாதம், மதவாதத்தை நிராகரித்துள்ளனர். அவ்வாறானவர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை. இங்கு மூவினத்தவர்களும் ஒன்றாக இருக்கின்றனர். தமது உறவினர்கள் உயிரிழந்திருந்தால் அவர்களை நினைவுகூருவதற்கு இடமுள்ளது. அது வடக்கு, கிழக்கு, தெற்காக இருந்தாலும் ஒன்றே.ஆனால் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதை தவிர விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படாது. அவ்வாறான செயற்பாடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சில அடையாளங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட சகல நினைவுகூரல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE கதம்பம்