கனடாவை உலுக்கிய கோர புயல்.. இருளில் மூழ்கிய 9 லட்சம் வீடுகள்

22.05.2022 16:26:12

கனடாவின் கிழக்கு மாகாணங்களை கடுமையான புயல் தாக்கியதில் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கனேடிய மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் கடுமையான புயல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அங்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்ககள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. கடுமையான இடியுடன் கூடிய மழைக்கு மூன்று பேர் பலியாகியுள்ளதாக ஒன்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலியான மூன்று பேரில் ஆண் ஒருவர், அவர் தங்கியிருந்த ட்ரைலர் மீது மரம் விழுந்த விபத்தில் பலியானார். அதேபோல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், நடத்து செல்லும்போது புயல் தாக்குதலால் அவர் மீது மரம் விழுந்து நசுக்கப்பட்டதால் உயிரிழந்தார்.

ஒட்டாவாவில் படகில் சென்ற 50 வயதுடைய பெண், நதியில் மூழ்கி இறந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், புயலால் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இரு மாகாணங்களிலும் கிட்டத்தட்ட 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.